விராட் கோலி (இந்தியா): இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தனது 100-வது டி 20 ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.33 வயதான அவர், பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். விராட் கோலி கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பரில் சர்வதேச அரங்கில் சதம் அடித்திருந்தார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி டெஸ்டில் 27 சதங்கள், ஒருநாள் போட்டியில் 43 சதங்கள் அடித்துள்ளார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக அதிக அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஆசிய கோப்பையில் அவர், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்க (இலங்கை): இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான லெக்-ஸ்பின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார் வனிந்து ஹசரங்க. அந்தத் தொடரில் 16 ஆட்டங்களில் 26 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். சக சுழற்பந்து வீச்சாளர்களான மகீஷ் தீக்சனா, ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோருடன் இணைந்து சுழலுக்கு சாதகமான ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் ஹசரங்க கலந்துகொள்ளவில்லை. பின்வரிசை பேட்டிங்கிலும் ஹசரங்க வலுசேர்க்கக்கூடியவர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்