ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. 27 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் உள்ள 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்படும். இதில் இடம் பெறும் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில் புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் தலா முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்று ஜூன் 19 முதல் 25-ம் தேதி வரையும் அரை இறுதி ஆட்டங்கள் ஜூன் 27-ம் தேதியும் நடைபெறுகின்றன. அரை இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் ஜூன் 29-ம் தேதி பார்படாஸில் பலப்பரீட்சை நடத்தும். தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஜூன் 2-ம் தேதி அமெரிக்கா - கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-ம் தேதி அயர்லாந்தை சந்திக்கிறது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்